422. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 1
டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.
வகுப்பறைக்கு அப்பாற்பட்டு நான் கற்றுக் கொண்ட பலவற்றுக்கும், சில சமயங்களில் தூண்டுகோலாகவும் பல சமயங்களில் ஆசானாகவும் நான் நினைக்கும் சுஜாதா சாருக்கு சென்னை நாரத கான சபாவில் நேற்று இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தேசிகன் மூலம் தெரிய வந்தது, சென்றிருந்தேன். சுஜாதா மட்டுமே தமிழ் எழுத்துலகின் (வாசகர்களுக்கும், பல எழுத்தாளர்களுக்கும்!) உண்மையான ஜனரஞ்சக வாத்தியார் என்றால் அது மிகையாகாது !
நான் சென்றபோது பாதி அரங்கமே நிறைந்திருந்தது, ஆனால் மெல்ல மெல்ல ஒரு 90% நிறைந்து விட்டது. வாத்தியாரின் வாசகர்கள் ஆகவும் நண்பர்கள் ஆகவும் விளங்கிய பிரபலங்கள் பலர் உரையாற்றினர். அவர்கள் பேசியதிலிருந்து, சுஜாதா என்பவர் பெரிய எழுத்தாளர்/சிந்தனாவாதி/அறிவுஜீவி என்பதை தாண்டி, ஒரு மிகச் சிறந்த மனிதர் என்பது புரிந்தது !
முதலில், விஜய் டிவியில் வாத்தியார் முன்பொரு முறை அளித்த பேட்டி (சிகரம் தொட்ட மனிதர்கள் என்ற நிகழ்ச்சிக்கு) ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர், PG Wodehouse தனது 93வது வயதில் ஒரு கதையை டைப் அடித்துக் கொண்டிருந்தபோதே இறந்து போன நிகழ்வைக் கூறி, அதே போல மரணிக்கும் வரை எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை தனக்கும் இருப்பதாகச் சொன்னது கொஞ்சம் நெகிழ்ச்சியைத் தந்தது! அப்படியே மரித்தும் போனார் தானே !!!
அதன் பின், வாத்தியாருக்குப் பிடித்த திவ்யபிரபந்தப் பாசுரத்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது.
பாடியவர்: நெய்வேலி சந்தானகோபாலன் அவர்கள் புதல்வி ஸ்ரீரஞ்சனி
இயற்றியவர்: குலசேகர ஆழ்வார்
பாசுரம்:
செடியாய வல்வினைகள் தீர்க்கும்* திருமாலே*
நெடியானே வேங்கடவா* நின்கோயிலின் வாசல்*
அடியாரும் வானவரும்* அரம்பையரும் கிடந்தியங்கும்*
படியாய்க் கிடந்து* உன் பவளவாய் காண்பேனே
பொருத்தமான பாசுரம் என்று தான் தோன்றுகிறது. குலசேகர மன்னன் வேண்டியது போல, வாத்தியார், வைகுந்தத்தில் படியாய் மாறி அவ்வரங்கனை நேரில் கண்குளிர தரிசித்துக் கொண்டிருக்கும் பாக்கியம் பெற்றிருப்பார் என்றே நினைக்கிறேன்!
இரங்கல் நிகழ்ச்சியை சுவைபட தொகுத்தவர் நடிகர் பார்த்திபன். நடுநடுவே அவர் கூறிய சின்னச்சின்ன விஷயங்களில் இரண்டு மனதைத் தொட்டது.
1. பல எழுத்தாளர்களை வாசகராகக் கொண்ட சுஜாதா, தன்னைப் போன்ற வாசகனை எழுத்தாளனாக்கியதை நினைவு கூர்ந்த்தார்.
2. சுஜாதா ஒரு முறை அவர் துணைவியாரிடம், அவருக்காக தான் பெரிய அளவில் எதுவும் சேர்த்து வைத்து விட்டுப் போகாததாகக் கூறியதாகவும், அதற்கு 'உண்மையான' சுஜாதா, "நீங்கள் எழுதிய எல்லாவற்றையும் என் பேரில் தானே எழுதியிருக்கிறீர்கள், அதை விட வேறென்ன வேண்டும் எனக்கு!" என்றாராம் !
பிரபலங்கள் பேசியதில் முக்கியமானவற்றை மட்டும் பகிர்கிறேன்.
மனுஷ்யபுத்ரன் தன் உடலின் ஒரு பகுதியை இழந்தது போல உணர்வதாகவும், சுஜாதா வாசகர் சந்திப்பு நிகழ்வுகளில் ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டதையும், வருடாவருடம் வாத்தியார் நினைவாக சுஜாதா விருது வழங்கவிருப்பதாகவும் தெரிவித்தார். சுஜாதா தனக்கு புது வாழ்வளித்தவர் என்றும் கூறினார்.
ரா.கி.ர, சுஜாதா என்ற சிறந்த நண்பரின் இழப்பு தன்னை மிகவும் அழ வைத்து விட்டதாகவும், சுஜாதா பத்திரிகை உலக அவசரங்களுக்கு மதிப்பு கொடுத்த விதத்திற்காக அவரை Editor's Delight என்று சிலாகித்தும், பாரதி போல, கல்கி போல இன்னொரு சுஜாதா வருவதற்கும் சாத்தியமில்லை என்றும் அஞ்சலி செலுத்தினார்.
வாத்தியாரின் மைத்துனியும், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வரும் ஆன நிர்மலா பிரசாத், தங்கள் கல்லூரியின் ஏகலைவர்கள் (மாணவிகள்) ஒரு துரோணாச்சாரியரை இழந்து வாடுவதையும், வாத்தியாரின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தமிழ் துணைப்பாட நூலாக சேர்க்கப்பட்டதும் தமிழ் வகுப்புகளில் 100% அட்டென்டன்ஸ் ஆனதையும், உரைகள்/சந்திப்புகள் வாயிலாக தமிழ் ஜர்னலிஸம் மாணவிகளுக்கு (கல்லூரியின் நிஜமான வாத்தியார்களுக்கு மேலாக!) அற்புதமான அறிவுரைகள் / ஆலோசனைகள் வாத்தியார் வழங்கியதையும், வாத்தியார் தனது பாரதி திரைப்பட அறிமுக உரை மூலம், தமிழர் அல்லா மாணவிகளுக்கும் பாரதி மேல் ஈடுபாடு வரச் செய்ததையும் எடுத்துக் கூறினார்.
கிரேசி மோகன் பேசியது சற்றே உருக்கமாக இருந்தது. பெங்களூரில் தனது நாடகங்களுக்கு வாத்தியார் வந்திருந்து, குழந்தை போல குலுங்கிக் குலுங்கி சிரித்து, கண்ணில் நீர் வர ரசித்ததை மோகனும் மற்றவரும் திரை மறைவிலிருந்து பார்த்து பரவசப்பட்டதையும், நாடகம் முடிந்தவுடன் குறைநிறைகளை (லாயர் கணேஷ் போல) வாத்தியார் அழகாக அலசியதையும் கிரேசி நினைவு கூர்ந்தார். மேலும், வாத்தியார் நாடகத்துறைக்கு செய்த சேவை மகத்தானது என்றும், வாத்தியார் (திவ்ய பிரபந்தம் மேல் அவருக்கு இருந்த காதலால்) தற்சமயம் வைகுண்டத்தில் பெருமாள் பக்கத்தில் இருப்பதை விட ஆழ்வார்கள் அருகே இருப்பதையே விரும்புவார் என்றும் சுவைபடக் கூறினார்.
மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன், மனைவி பெயரில் எழுதியவர்கள் மேல் தனக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை என்றும், சுஜாதா அதை மாற்றியதாகவும், வாத்தியார் தனது கதைகளில் பெண்களை 26,36 என்று நம்பர்களாக ஆக்கியதையும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்! இறந்தவுடன் சுஜாதா எல்லோருக்கும் வேண்டப்பட்டவர் ஆயிட்டார் என்று ஜெ.கா சொன்னதை ஏற்க முடியவில்லை. வாழும்போதே அவர் (சில வலைப்பதிவர்களை தவிர்த்து!) பெரும்பாலானவருக்கு வேண்டப்பட்டவராகவே இருந்திருக்கிறார் என்பது தான் உண்மை. நவீனமான விஷயங்களையும், அறிவியல் / தொழில்நுட்பச் சிந்தனையையும் தமிழுக்குக் கொண்டு வந்ததில் சுஜாதா பெரும்பங்காற்றியுள்ளார் என்று ஜெ.கா சிலாகித்துக் கூறினார். பல ஆண்டுகளுக்கு முன் ஒரு லாட்ஜ் ரூமில் சுஜாதாவுடன் ஓர் இரவு முழுதும் விழித்திருந்து தமிழ் இலக்கியம் பற்றி விவாதித்தையும் நினைவு கூர்ந்தார்.
ஆ.வியின் அசோகன், வாத்தியாரின் தாக்கமே இல்லாத எழுத்தாளர்கள் மிகக் குறைவு என்றும், அவரைப் போல எழுதினாலும் அல்லது அவரைப் போல எழுதாவிட்டாலும், இரண்டுமே பெருமைப்படக் கூடிய விஷயங்கள் தான் என்றும் கூறினார் !
இந்திரா பார்த்தசாரதி, வாத்தியாரின் 'நைலான் கயிறு' ஒரு முன்னோடி என்றும், தான் நாடகம் எழுதுவதற்கு வாத்தியார் தான் இன்ஸ்பிரேஷன் என்றும், தனது 'மழை' என்ற நாடகத்தைப் பார்த்து விட்டு அதை தமிழில் மொழி பெயர்த்தால்(!) நன்றாக இருக்கும் என்று சுஜாதா சொன்னதையும், 1965 காலகட்டத்தில், தானும், சுஜாதாவும், 'கணையாழி' கஸ்தூரி ரங்கனும் தில்லியில், இலக்கியம் சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதையும் நாஸ்டால்ஜிக்காகக் கூறினார்.
நடிகர் சிவகுமார், வாத்தியாரின் 'மேகத்தை துரத்தினவன்', நைலான் கயிறு, வைரங்கள், மறுபடியும் கணேஷ், கொலையுதிர் காலம் போன்ற கதைகளை வாசித்தும், அவரது டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, அன்புள்ள அப்பா போன்ற நாடகங்களை பார்த்தும் தான் 'மிரண்டு' போனதை வாத்தியாரிடமே போன் போட்டுச் சொன்னதைக் குறிப்பிட்டார். வாத்தியார் தங்கள் வீட்டுக்கு தங்க வரும்போது, தன்னிடம் ஒரு லுங்கி வாங்கிக் கட்டிக் கொண்டு, தன்னோடு உணவருந்தி இயல்பாக இருந்த நாட்களையும் சிவகுமார் நினைவு கூர்ந்ததோடு, வாத்தியார் சகமனிதர்களை பலவீனங்களோடு ஏற்றுக் கொண்ட Down to Earth மனிதர் என்றும் சிலாகித்துப் பேசினார். சுஜாதா, கமலை அறிவு வழியாகப் பேசுபவர் என்றும், தன்னை மனசு வழியாகப் பேசுபவர் என்றும் ஒரு முறை சொன்னதை சிவகுமார் குறிப்பிட்டார்!
அடுத்துப் பேசிய திருப்பூர் கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி அவர்கள் தினமணி கதிர் ஆசிரியராக இருந்தபோது, ஒரு சமயம் வெண்பா போட்டி அறிவித்ததையும், அதற்கு வாத்தியார் "வேண்டாம் வரதட்சிணை" என்ற தலைப்பில் நகைச்சுவை வெண்பா எழுதியதையும், அதை கிருஷ்ணனின் தந்தை கட்டம் கட்டி பதிப்பித்ததையும் குறிப்பிட்டார் !
பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!
சுஜாதா ஒரு தசாவதானி என்றும், அவருக்கு எல்லா வித தமிழ் தட்டச்சும் சரளமாக வரும் என்றும் கூறினார். ஒரு சமயம் ஒரு வாசகர், "1330 குறள்கள் இருப்பதால், அதை திருக்குறள்கள் என்று தானே குறிப்பிட வேண்டும், ஏன் திருக்குறள் என்று ஒருமையில் இருக்க வேண்டும் ?" என்று கேட்ட கேள்விக்கு, வாத்தியார் spontaneous ஆக "திருக்குறள் 'கள்'ளை அனுமதிப்பதில்லை" என்று பதில் கூறியதையும், திருமதி சுஜாதாவின் சீரிய கவனிப்பால் தான் ஒரு 10 வருடங்கள் அவர் அதிகமாக உயிர் வாழ்ந்ததாகவும் கிருஷ்ணன் கூறினார்.
சாரு நிவேதிதா, சிவசங்கரி, மதன், ஓவியர் ஜெயராஜ், பேராசிரியர் ஞானசம்பந்தன், கஸ்தூரி ரங்கன், கமல், வைரமுத்து, தங்கர் பச்சான், கனிமொழி, நண்பர் தேசிகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் இரங்கற் கூட்டத்தில் பேசியதை அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.
எ.அ.பாலா
8 மறுமொழிகள்:
Rest in Peace, Sujatha Sir !
நச்சுன்னு தொகுத்திருக்கீங்க பாலா!
வேலை செய்யும்போதே மரணிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும், சங்கராபரணம் சங்கர சாஸ்திரிகள் போல. எனக்கும் அதே ஆசைதான், கடைசி மொழிபெயர்ப்பை அனுப்பி விட்டு அப்படியே கீபோர்டின் மேல் சாய்ந்து சாக வேண்டும். ஆனால் அதற்கு முன்னாலே பில்கள் எல்லாத்தையும் வாங்கிடணும். அந்த கடைசி வேலைக்கு கூட முன்கூட்டியே பில் வாங்கியிருந்தா உத்தமம்.
இதைத்தான் ஜெயா டிவி பேட்டியிலும் சொன்னேன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்னால் கூட்டத்திற்குப் போக முடியவில்லை.
பதிவுக்கு நன்றி.
நல்லாத் தொகுத்துக் கொடுத்திருக்கீங்க பாலா.
நன்றி.
அடுத்த பகுதியைச் சீக்கிரம் போடுங்க.
நல்ல தொகுப்பு. நன்றி.
சுரேஷ், டோ ண்டு சார், ஓகை சார், துளசி அக்கா, பாரதிய நவீன இளவரசன்,
வருகைக்கு நன்றி.
அடுத்த பாகம் இன்னும் சிறிது நேரத்தில் !
எ.அ.பாலா
//எனக்கும் அதே ஆசைதான், கடைசி மொழிபெயர்ப்பை அனுப்பி விட்டு அப்படியே கீபோர்டின் மேல் சாய்ந்து சாக வேண்டும்.
//
இன்னுமோர் நூற்றாண்டு இரும் ! அப்புறம் சாவைப் பற்றிப் பேசுவோம் :)
Post a Comment